சுவாமி விவேகானந்தர் கூறியவைகளை, உன் எதிர்காலம் உன் கையில் என்ற புத்தகமாகத் தொகுத்து ஸ்ரீராமகிருஷ்ண மடம் வெளியிட்டுள்ளது.
அந்த புத்தகத்தில் இடம்பெற்றிருப்பவற்றை தமிழ்.வெப்துனியா.காம் வாசகர்களுக்காக அளிக்கின்றோம்.
நமது நோக்கம்
இயைபுடன் முன்னேறிய மனிதனைப் பார்க்கவே நாம் விரும்புகிறோம்.
அவன் விசாலமான இதயம், பரந்த மனம், உயர்ந்த செயல் இவற்றைப் படைத்திருக்க வேண்டும்.
உலகத்தின் துயரையும் துன்பத்தையும் தீவிரமாக உணரும் இதயம் படைத்தவனே நமக்குத் தேவை. அத்துடன் நிற்காமல், அந்த உணர்ச்சியையும் அறிவையும் செயலாக்குபவனே நமக்கு மிகவும் வேண்டப்படுபவன்.
மூளை, இதயம், செயல் இவை ஒருங்கிணைந்து செயல்படுவதே தேவை.
நம்மை மேம்படுத்துவதன் முக்கியத்துவம்
நம்மைச் சுற்றி நடப்பதை நீங்கள் காண்கிறீர்கள். அனைத்தின் மீதும் ஆதிக்கம் செலுத்தும் ஒன்றாக உள்ளது உலகம். நமது சக்தியில் ஒரு பாகம் நமது சொந்த உடலைப் பாதுகாப்பதற்குச் செலவாகிறது. இதைத் தவிர ஒவ்வொரு சிறு பகுதியும் அல்லும் பகலும் பிறர்மீது ஆதிக்கம் செலுத்தவே பயன்படுகின்றன.
நமது உடல்கள், நமது குணங்கள், நமது அறிவு, நமது ஆன்மீகம் எல்லாமே இடைவிடாமல் பிறர் மீது ஆதிக்கம் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அதைப் போல் நாமும் அவற்றின் ஆதிக்கத்திற்கு உள்ளாகி வருகிறோம். இது நம்மைச் சுற்றி எஙகும் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது.
இப்போது உதாரணம் ஒன்றை எடுத்துக் கொள்வோம். ஒருவர் வருகிறார். அவர் நன்கு கற்றவர் என்பது உங்களுக்குத் தெரியும். அவரது மொழி நடை அழகாக உள்ளத. அவர் ஒரு மணி நேரம் உங்களுடன் பேசுகிறார். ஆனால் சொன்னதில் பெரிதாக எதுவும் உங்கள் மனதில் பதியவில்லை.
இன்னொருவர் வருகிறார். ஒரு சில வார்த்தைகளே பேசுகிறார். அவை நன்றாக ஒழுங்குப்படுத்தப்படவும் இல்லை. ஒரு வேளை இலக்கணப் பிழைகளும் அதில் காணப்படும். ஆனால் அவர் சொன்னது பேரளவிற்கு உங்கள் மனதை ஆக்கிரமிக்கிறது.
உங்களுக்குள் பலரும் இதை அனுபவித்திருப்பீர்கள். எனவே ஒரு போதும் வார்த்தைகள் மட்டுமே மனத்தின் பதிவை உண்டாக்கி விடுவதில்லை என்பது வெளிப்படை. வார்த்தைகள், ஏன், எண்ணங்கள் கூட ஒரு பதிவை உண்டு பண்ணுவதற்கு மூன்றிலொரு பங்கு சக்தியை மட்டுமே அளிக்கின்றன, மனிதனே மற்ற இரண்டு பங்கை அளிக்கிறான். மனிதனின் கவரும் ஆற்றல் என்று நீங்கள் குறிப்பிடுகின்ற அந்தச் சக்தியே வெளியேறி உங்களிடம் பதிவை உண்டாக்குகிறது.
நமது குடும்பங்களில் தலைவர்கள் உள்ளனர். அவர்களுள் சிலர் வெற்றி பெறுகின்றனர். சிலர் பெறுவதில்லை. ஏன்? நாம் தோல்வியுறும்போது பிறரைக் குறை கூறுகிறோம். நாம் வெற்றி பெறாத அந்தக் கணமே, நமது தோல்விக்குக் காரணம் இவர்தான் என்று ஒருவரைக் காட்டிவிடுகிறோம்.
தோல்வியுறுகின்ற யாரும் தனது சொந்தக் குற்றங்களையும் பலவீனங்களையும் ஒப்புக் கொள்ள விரும்புவதில்லை. தன்னைக் குற்றம் அற்றவனாகக் கருதவும், குற்றத்தைப் பிறர் மீதோ, பிற பொருளின் மீதோ, ஏன் துரதிர்ஷ்டத்தின் மீதாவது சுமத்தவுமே ஒவ்வொருவனும் முயல்கிறான். குடும்பத் தலைவர்கள் தவறும்போது, சிலர் குடும்பத்தை நன்றாக நடத்துவதற்கும் பிறர் அவ்வாறு நடத்தாததற்கும் காரணம் என்ன என்பதைத் தங்களுக்குள் கேட்டுக் கொள்ள வேண்டும். வேறுபாட்டிற்குக் காரணம் மனிதனே, அவனது குணச்சிறப்பே, அவனது ஆளுமையே என்பதை அப்போது காண்பீர்கள்.
மனிதகுலத்தின் பெரிய தலைவர்களைக் கவனித்தால், அவர்களின் ஆளுமையே அவர்களைத் தலைவர்கள் ஆக்கியது என்பதையே எப்போதும் காண்போம். கடந்த காலத்தின் எல்லா நூலாசிரியர்களையும் சிந்தனையாளர்களையும் எண்ணிப் பார்ப்போம்.
உண்மையைச் சொல்வதானால், அப்படி எத்தனை எண்ணங்களைத்தான் அவர்கள் எண்ணிவிட்டார்கள்? கடந்த காலத்திலிருந்து மக்கள் குலத் தலைவர்கள் நமக்கு விட்டுச் சென்ற நூல்கள் அனைத்தையும் பாருங்கள்.
அவர்கள் எழுதிய புத்தகங்கள் ஒவ்வொன்றையும் மதிப்பிடுங்கள். இன்று வரை உலகில் நினைக்கப்பட்டுள்ள, புதிய, சொந்தமான உண்மைக் கருத்துக்கள் கையளவு மட்டுமே. அவர்கள் நமக்கு விட்டுச் சென்ற எண்ணங்களை அவர்களுடைய நூல்களில் படியுங்கள். அந்த நூலாசிரியர்கள் நமக்கு மாபெரும் மக்களெனத் தோன்றுவதில்லை. எனினும் அவர்கள் தங்கள் காலங்களில் சிறந்தவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் அறிவோம்.
அவர்களை அவ்வாறு ஆக்கியது எது?
அவர்கள் சிந்தித்த எண்ணங்களோ, அவர்கள் எழுதிய நூல்களோ, அவர்கள் செய்த சொற்பொழிவுகளோ மட்டும் அல்ல, அப்போது இருந்து, இப்போது மறைந்துவீட்ட வேறு ஏதே ஒன்று, அதாவத, அவர்களது ஆளுமை. நான் முன்பு கூறியது போல், அவர்களின் ஆளுமை மூன்றில் இரண்டு பங்கு, அவர்களின் அறிவும் வார்த்தைகளும் ஒரு பங்கு. உண்மை மனிதன் அதாவது அவர்களின் ஆளுமையே நம்மை ஆக்கிரமிக்கிறது. நம் செயல்கள் விளைவுகள் மட்டுமே. மனிதன் உள்ளபோது செயல்கள் வந்தேயாக வேண்டும். விளைவு, காரணத்தைப் பின் தொடர்ந்தே தீரும்.
கல்வி, பயிற்சி இவை அனைத்தின் லட்சியமும் இந்த மனிதனை உருவாக்குவதாகவே இருக்க வேண்டும். ஆனால் அதற்குப் பதிலாக நாம் வெறும் மேற்பூச்சு பூசி அழகுபடுத்த முயன்று வருகிறோம். அகத்தே ஒன்றும் இல்லாத போது புறத்தை அழகுபடுத்துவதால் என்ன பயன்? எல்லா பயிற்சிகளின் பயனும் நோக்கமும் மனிதனை வளரச் செய்வதே. தன் சகோதர மக்கள் மீது ஆதிக்கம் செலுத்துபவன், அவர்கள் மீது மாய வலையை வீசியது போன்று அவர்களைக் கவர்பவன் ஆற்றலின் ஒரு சுரங்கமாகிறான். அத்தகையவன் தயாராகும்போது, விரும்புகின்ற எதையும் அவனால் செய்ய முடியும். அவனது ஆளுமையின் ஆதிக்கம், எதன் மீது செலுத்தப்பட்டாலும் அதனைச் செயல்பட வல்லது ஆக்கும்.
நன்றி : தின இதழ்
பிரிந்து சென்ற காதலரை இகழ்வது தனக்கே இழிவாகும் என்பதால், அவருடைய பெருமையைப் பற்றியே என்னுயிர்க் காதல் நெஞ்சம் எண்ணிக் கொண்டிருக்கும்.
2 comments:
எல்லாத்தையும் காப்பி அடிச்சு போட்டுட்டு இருக்கியா சொந்தமா எதாவது எழுதலாமில்ல
யாரு அது ? பேர் சொல்லாம சொன்ன எப்படி ?
Post a Comment